திருப்பரங்குன்றம்
"சந்தனப் பொதியமும், தண்குமரித்துறையும், புண்ணியப் பொருநையாகிய தாமிரபரணி நதியும் தமிழ் கண்டதோர் வையை நதியும் தன்னகத்துடையது"
நின்நாடு நல்ல தமிழுடைத்து ஒளவையார்
பன்று தொல் புகழ் பாண்டி நன்னாடு சேக்கிழார்
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாடென்று மாணிக்கவாசகர்
பாண்டிய நாடே பழம்பதி என மாணிக்கவாசகரால் போற்றப்படுவது செந்தமிழ்ப் பாண்டிய நாடு. இது சந்தனப் பொதிய செந்தமிழ் முனிவனும், சவுந்திர பாண்டியன் எனும் தமிழ்நாடனும், சங்கப்புலவரும் தழைத்தினிதோங்க வைத்த மங்கல மாண்பினை உடையது.
மதுரையின் மாண்பு
ஆடக மதுரை மண்சுமந்த நெற்றிக்கடவுள் கூலிமதுரை என்னும் மணிமொழிகள் பாராட்டக் கூறும் மதுரை மாநகர் பாண்டிய நாட்டின் தலைநகரமாகும்.சென்ற காலத்தின் பழுதிலாதிறனும், எதிர்காலத்தின் சிறப்பும் ஒருங்கே வாய்ந்த பழம்பதி மதுரை. இது கண்ணுதற் பெருமான் புலவரோடு இருந்து புண்ணியத் தமிழ் ஆய்ந்த ஞானபூமி ஆகும். மேலும் இது மதிமலி புரிசை மாடக்கூடல் என்று முழுமுதற் கடவுளே மொழிந்த பெருமைசால் மூதூராகும். இந்நகர் பற்றி, மும்மைப்புவனங்களின் மிக்க மூதூர் என்றும் சால்பாய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர் என்றும் சேக்கிழார் பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். இந்நகரின் அணியாகச் சான்றோர் கவியென வடபால் ஓடுவது வையையாறு, இவவாற்றின் கரைகளிலே பண்டைய நாளில் முத்தமிழ் மணம் கமழ்ந்தது. அதன் அலைகளிலே தமிழ் ஏடு தழைத்தது. இதனாலன்றோ தமிழ் கண்டதோர் வையை என்று புகழ்ந்து இசைத்தார் பாரதியார். இவ்வாற்றின் கரையிலே தான் ஆலவாய் அண்ணல் மண்சுமந்த பாடற்பரிசு பெற மண் சுமந்த பணி செய்தார். அங்கயற்கண்ணி அம்மையாரும், சொக்கலிங்கப் பெருமானும் கோயில் கொண்டுள்ள ஆலவாய் என்னும் பெயருடைய திருக்கோயில், நகரின் நடுவே அமைந்து விளங்குறது.
கோயில் நகரமெனவும், விழா நகரமெனவும் சிறப்புக்களை உடையது இந்நகரேயாகும். இன்றைய தமிழ் மாநிலத்திம் சென்னைக்கு அடுத்த பெரிநகரமாக மதுரை விளங்குகிறது. இத்தகு சிறப்புகளை உடைய மதுரையின் தெற்கே 5 கல் தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது.
திருப்பரங்குன்றம் தலச்சிறப்பு
மதுரைப் புகைவண்டி நிலையத்திலிருந்து தெற்கே செல்லும் வழியில் பசுமலைக்கு அடுத்த நிலையமாக இவ்வூர் உள்ளது.
நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையில் மாடமலிமறுகில் கூடற்குடவாய்ன் என்று திருப்பரங்குன்றம் மதுரைக்கு மேற்கே இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. கந்த புராணத்தில் கச்சியப்பரும் கூடலின் குடதிசை அமர பரங்குன்று என்று குறிப்பிட்டுள்ளைர். மதுரை நகரின் கீழ்க்கிசையிலிருந்து நோக்குவார்க்குப் பரங்குன்றம் தென்மேற்குத் திசையில் காட்சி அளிப்பதை இன்றும் காணலாம்.
நகரம் மேற்கே விரிந்துள்ளமையால் பரங்குன்றம் தெற்கித்திசையில் இன்று காணப்படுகிறது. பாண்டிய நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகப் பரங்குன்றம் திகழ்கிறது.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் இப்பூவுலக மக்கள் பெற்றுய்யும் வண்ணம் பரம கருணாமூர்த்தியாகிய முருகப்பெருமான் திருவருளே திருமேனியாக சைவசமயக் குரவர் நால்நருள் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய இருவருடைய தேவாரப்பதிகங்கள் பாடப்பெற்று பாண்டிய நாட்டின் பதினான்கு சைவத் தலங்களுள் திரிப்பரங்குன்றம் ஒன்றாக திகழ்கின்றது. இவ்வூர் இவர்களால் இன்னகர் நன்னகரென்ரு சிறப்பிக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளை முறையாகப் பெற்று பதிகளில் இது சாலச் சிறந்தது. மக்கள் பலரும் நாளும் வந்து தம் காரிய சித்தி அடையும் தலமாக விளங்கும் இத்திருப்பரங்குன்றம் மிக சிறப்புடையதாகும்.
பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவதலங்கள்
1. திருஆலவாய் மதுரை 2. திருஏடகம்
3. திருப்பரங்குன்றம் 4. திருஆப்பனூர்
5. திருக்கொடுங்குன்றம் பிரான்மலை 6. திருப்புத்தூர்
7.திருப்புவனவாயில் 8. திருஇராமேசுவரம்
9. திருஆடானை 10. திருக்கணாப்போர்
11. திருப்புவனம் 12. திருக்குற்றாலம்
13. திருநெல்வேலி 14. திருச்சுழியல்
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து வசதி திருப்பரங்குன்றம் என்னும் இயற்கை எழில் சூழ்ந்துள்ள அழகுமிக்க சிற்றூரில் முந்நூறு மீட்டர் உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் ஊ ரின் நடுவே குன்றே கோவிலாக எழுந்துள்ள எழில்மிகு திருக்கோவிலே திருப்பரங்குன்றம் திருக்கோயிலாகும்.முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடாகச் சிறப்புப் பெற்று விளங்குதலால், அவன் பெயராலேயே இத்திருக்கோவில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் என்றே அழைக்கப்படுகின்றது. இத்தலம் 275 தேவாரத் தலங்களுள் ஒன்றாக, பாண்டிய நாட்டின் மதுரை மாநகரிலிருந்து தென்மேற்கில் ஐந்து கல் தொலைவில் மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுச் சாலைக் கருகிலேயே அமைந்துள்ளது. மதுரை புகைவண்டி நிலையத்திலிருந்து தெற்கே செல்லும் வழியில் பசுமலைக்கு அடுத்த நிலையமாக இவ்வூர் உள்ளது.
மதுரையில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
மதுரையிலிருந்து திருமங்கலம், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஐபாளையம் வழியாக தென்காசி செல்லும் இரயில்களும், திருநெல்வேலி, நாகர்கோயில், தூத்துக்குடி செல்லும் இரயில்களும் திருப்பரங்குன்றம் இரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
திருப்பரங்குன்றம் திருக்கோவில் சிறப்பு
முதற்படை வீடு
1. திருப்பரங்குன்றம்
2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
3. திருவாவினன்குடி (பழனி)
4. திருவேரகம் (சுவாமிமலை)
5. குன்றுதோறாடல் (திருத்தணிகை)
6. பழமுதிர்ச்சோலை என்னும் ஆறுபடை வீடுகளாகும்.
ஆறுமுகங்கொண்ட முருகனோடு தொடர்புடைய பொருள்கள் பலவற்றை ஆறு என்று முடியும் எண்ணில் நினைப்பதில் அன்பர்கள் இன்பங்கண்டனர். நக்கீர் தாமருளிய திருமுகாற்றுப்படையில் முருகன் உறையும் இடங்களாக ஆறு இடங்களைக் குறிப்பிடுகிறார். இவர் கூறியதிலிருந்து ஆறுபடை வீடுகள் என்பது வழக்கில் வந்தது. "ஆறுதிருப் பதியில் வளர் பெருமானே"
"சகலமும் முதலாகிய அறுபதி நிலைமேவிய
தடமயில் தனிலேறிய பெருமானே"
என்று திருப்புகழில் அருணகிரிநாதரும், ஆறு திருப்பதி கண்டு ஆறெழுத்தும் அன்பினுடன் கூறுபவர் சிந்தைகுடி கொண்டேனே என்று கந்தர் கலி வெண்பாவில் குமரகுருபரரும், ஆறுபடை வீடுகளை ஆறு திருப்பதி என்றே கூறியுள்ளனர். இத்தகு சிறப்புக்கள் நிறைந்த படைவீடுகளுள் முதலாவதாக விளங்குவது திருப்பரங்குன்றமாகும்.
தலப் பெயர்கள்
திருப்பரங்குன்றம் என மக்களால் பொதுவாக அழைக்கப்படும் இத்தலம் திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசலதலம், குமாரபுரிவிட்டணுதுருவம், கந்தமாதனம், கந்தமலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம், முதற்படைவீடு என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. குடைவரைக்கோயிலான இத்திருக்கோயில் சிவபெருமானுக் காகவே தோற்றுவிக்கப்பட்டதெனினும் பிற்காலத்தில் இது முருகப்பெருமானின் சிறப்புத்தலமாக விளங்கி வருவதாகிறது. தென்-தெற்கு, பரன்-கைலாயம், குன்று-மலை தெற்கு கைலாய மலை என்றும் இப்பகுதியைச் சிறப்பித்துக் கூறலாம். இத்தலம் சிவபெருமான் திருக்கோயிலும், முருகப்பெருமான் திருக்கோயிலும் ஆக இரண்டினையும் பெற்ற தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.